ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்தார்

சீதா சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி ஆவார்.;

Update: 2024-03-19 09:54 GMT

ராஞ்சி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேவேளை பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் இன்று ராஜினாமா செய்தார். ஜார்கண்ட் மாநிலம் ஜாமா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சீதா சோரன். இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி ஆவார். இவர் தனது எம்.எல்.ஏ. பதவி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ஜாமா தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதா தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கும், அவரது மாமனாருமான ஷிபு சோரனுக்கு  அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், தனது கணவர் துர்கா சோரனின் மறைவுக்குப் பிறகு, கட்சி தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதுமான ஆதரவை வழங்கவில்லை. எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதை நான் அறிந்துள்ளேன். எனது ராஜினாமாவை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பாளர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் முன்னிலையில் சீதா சோரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை பா.ஜ.க.வினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

நான் 14 ஆண்டுகளாக ஜே.எம்.எம். கட்சிக்காக உழைத்தேன், ஆனால் கட்சியில் இருந்து எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. இதனால் நான் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா ஆகியோர் மீது எனது நம்பிக்கையை வெளிப்படுத்தி இன்று பா.ஜ.க.வில் இணைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்