ஜெயலலிதா பொருட்களை ஏலம்விட பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு வக்கீலை நியமித்து அவரது தலைமையில் ஏலம் விட கர்நாடக அரசுக்கு பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு வக்கீலை நியமித்து அவரது தலைமையில் ஏலம் விட கர்நாடக அரசுக்கு பெங்களூரு ேகார்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறை தண்டனை
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதன்முறையாக தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இங்கு அதற்கு என்றே தனிக்கோர்ட்டு உருவாக்கப்பட்டது. அந்த தனிக்கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோா்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனு ஏற்கப்பட்டு, சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணம்
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இதையடுத்து அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் அனைவரும் தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி ஒரு கடிதம் வழங்கினார். அதே போல் கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் அவர் கடிதம் அனுப்பினார்.
ஏலம் விட உத்தரவு
இந்த நிலையில் பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள், சேலைகள் மற்றும் காலணிகளை ஏலம் விடும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி இருந்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அந்த கோர்ட்டு நீதிபதி ராமச்சந்திர ஹுத்தார் நேற்று தீர்ப்பு கூறியுள்ளார். அதில், ஜெயலலிதாவின் புடவைகள் உள்பட 29 பொருட்களை ஏலம் விட வேண்டும் என்றும், இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ஒரு சிறப்பு வக்கீலை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
விரைவாக செயல்படுத்த வலியுறுத்த முடிவு
இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி அரசுக்கு உத்தரவிட கோரி நான் சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு மீது விசாரணை நடத்தி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான் 3 பொருட்களை மட்டும் ஏலம் விட கோரினேன். ஆனால் கோர்ட்டு, சம்பந்தப்பட்ட 29 பொருட்களையும் ஏலம் விடுமாறு உத்தரவிட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை விரைவில் சந்திக்க உள்ளேன். அப்போது, இந்த கோர்ட்டு உத்தரவு நகலை வழங்கி, இதை விரைவாக செயல்படுத்துமாறு கோர முடிவு செய்துள்ளேன். இந்த விஷயத்தை நான் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளேன்".
இவ்வாறு அவர் கூறினார்.