ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலி நியமனம்
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விட கா்நாடக அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விட கா்நாடக அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தங்க-வைர நகைகள்
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர்.
முன்னதாக சொத்து குவிப்பு புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நரசிம்மமூர்த்தி மனு
இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான அந்த பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி 32-வது கூடுதல் பெங்களூரு சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த அந்த கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதில், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட அரசு சிறப்பு வக்கீல் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடுத்து, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு நரசிம்மமூர்த்தி கடிதம் வழங்கி, கோர்ட்டு உத்தரவுப்படி அரசு சிறப்பு வக்கீலை நியமிக்குமாறு கேட்டு கொண்டார்.
விரைவில் ஏலம்
இந்த நிலையில் கர்நாடக அரசின் சட்டத்துறை செயலாளர் ஆதிநாராயணா, ஜெயலலிதா உள்ளிட்டோரின் பொருட்களை ஏலம் விடுவதற்காக மாநில சிறப்பு வக்கீல் கிரண் ஜவலியை அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா பொருட்களை ஏலம்விட வக்கீலை நியமிக்க கோர்ட்டு உத்தரவிட்டு 3 மாதங்கள் ஆகியும் கர்நாடக அரசு சிறப்பு வக்கீலை நியமிக்கவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் ஆணைய உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதாவது சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட்டுவிட்டாரா என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்து தகவல் ஆணையம் , ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட வக்கீல் கிரண் ஜவலி நியமிக்கப்பட்டு இருப்பதாக நரசிம்ம மூர்த்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கஜனாவில் உள்ள பொருட்கள் விவரம்
கர்நாடக மாநில கஜானாவில் இருக்கும் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
11,344 பட்டுப்புடவைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த சேலைகள், 44 ஏ.சி. எந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேசுகள், 91 கைக்கெடிகாரங்கள், 27 சுவர் ெகடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 மேஜைகள், 24 மெத்தைகள், 9 உடை அலங்கார டேபிள்கள், 81 தொங்கும் அலங்கார மின்விளக்குகள், 20 ஷோபா செட்டுகள்.
750 ஜோடி செருப்புகள், 31 உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள், 215 மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள், 3 இரும்பு பெட்டகங்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள் (பிரிட்ஜ்கள்), ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 514 மற்றும் ரூ.32 ஆயிரத்து 688 ரொக்கம், 10 டி.வி.க்கள், 8 வி.சி.ஆர்.கள்., ஒரு வீடியோ கேமரா, 4 சி.டி. பிளேயர், 2 ஆடியோ பிளேயர்கள், 24 ரேடியோ பெட்டிகள் மற்றும் 1,040 வீடியோ கேசட்டுகள். இதுதவிர தங்கம், வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள், தங்க வளையல்கள், கை செயின்கள், கம்மல்கள், காதுமாட்டிகள், மூக்குத்திகள், வீர வாள்கள், மயில் சிலைகள், விலை உயர்ந்த பன்னீர் சொம்பு, முருக்கு செயின்கள், சந்தன கிண்ணம், தங்க பேனா, தங்க அட்டை, தங்க தட்டு, குங்கம சிமிழ், முதுகு வலிக்கு பயன்படுத்தும் பெல்ட், மோதிரம், தங்க காசு மாலை, தங்க பெல்ட், தங்க சாமி சிலைகள், காமாட்சி விளக்குகள், தங்க கீ செயின், தங்க மாம்பழம், தங்க கைக்கெடிகாரம் ஆகியவை உள்ளன.