கட்சி மேலிடத்திற்கு 'கப்பம்' கட்டுவது காங்கிரசின் கலாசாரம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சனம்

கட்சி மேலிடத்திற்கு ‘கப்பம்' காட்டுவது காங்கிரசின் கலாசாரம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.

Update: 2022-10-13 21:40 GMT

பெங்களூரு:

காங்கிரசின் கலாசாரம்

விஜயநகர் மாவட்டத்தில் உள்ள ஹூவினஹடகலியில் பா.ஜனதா ஜனசங்கல்ப பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

கட்சி மேலிடத்திற்கு பணம் கொடுப்பது குறித்து சித்தராமையா பேசுகிறார். கட்சி மேலிடத்திற்கு கப்பம் கட்டுவது அதாவது பணம் கொடுப்பது காங்கிரசின் கலாசாரம். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது கர்நாடகத்தை 5 ஆண்டுகள் காங்கிர் மேலிடத்தின் ஏ.டி.எம். ஆக பயன்படுத்தினர். காங்கிரஸ் மாநில தலைவர், பணம் கொடுக்க டெல்லி சென்றபோது தான் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கினார்.

எதையும் செய்யவில்லை

அதனால் காங்கிரசிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை. பாக்கிய திட்டங்களால் காங்கிரஸ் கொள்ளையடித்தது. அதனால் தான் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மக்கள் தோற்கடித்தனர். கர்நாடகத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருந்தால் அது காங்கிரசின் ஊழல்கள் தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரசின் பாதயாத்திரை நாளை (இன்று) பல்லாரிக்கு வருகிறது. சோனியா காந்தி பல்லாரியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். ஆனால் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் உத்தரபிரதேசத்திற்கு சென்றார். பல்லாரியின் வளர்ச்சிக்கு அவர் எதையும் செய்யவில்லை. இப்போது அவரது மகன் பல்லாரிக்கு வருகிறார். அவர் பொய் பேச வருகிறார். மக்கள் இதை நம்ப மாட்டார்கள். காங்கிரஸ் என்றால் தோல்வி என்று அர்த்தம். தோற்கும் கட்சிக்கு யாரும் போக மாட்டார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்