நாட்டை 2 ஆக பிளவுப்படுத்திய காங்கிரசார் ஒற்றுமை பாதயாத்திரை நடத்துவது வெட்கக்கேடானது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சனம்

நாட்டை 2 ஆக பிளவுப்படுத்திய காங்கிரசார் ஒற்றுமை பாதயாத்திரையை நடத்துவது வெட்கக்கேடானது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-09-30 18:45 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆட்சிக்கு வர முடியாது

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை எதற்காக நடத்துகிறாரோ தெரியவில்லை. இதில் அரசியல் ஆதாயம் தேடுவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறோம் என்று சொல்கிறவர்களுக்கு நாட்டின் வரலாறு தெரியுமா?. நாட்டை 2 ஆக பிளவுப்படுத்திய காங்கிரசார் தற்போது ஒற்றுமைப்படுத்துகிறோம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துவது வெட்கக்கேடானது. பிரதமர் மோடி சாதி-மதம் வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து நாட்டை வழிநடத்தி வருகிறார்.

தொடர் தோல்விகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியினர் தங்களின் அங்கீகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்கள். இத்தகைய நாடகங்களை கர்நாடக மக்கள் நிறைய பார்த்துள்ளனர். காங்கிரஸ் கட்சி என்ன தான் முயற்சி மேற்கொண்டாலும் கர்நாடகத்தில் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. ராகுல் காந்தி முதலில் காங்கிரசை ஒன்றுபடுத்தும் பணியை செய்ய வேண்டும்.

பயப்பட மாட்டோம்

முதலில் தங்கள் கட்சியில் உள்ள குழப்பங்கள், குளறுபடிகளை சரிசெய்து கொண்டு, பின்னர் நாட்டை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். நான் விரைவில் மாநில சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். காங்கிரசாரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்