பீகார் கவர்னருடன் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு - ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல்
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்னா,
பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.
பின்னர் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்துவதாக கூறி, லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்த நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனிடையே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை அமைப்பதிலும் நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழலில், பீகாரில் கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடன் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி வலுத்து வருகிறது. அதேசமயம் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் வலியுறுத்தியும் கூட்டணி கட்சிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், இது தொடர்பாக பீகார் மாநில கவர்னரை இன்று சந்திக்க முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.