சுருக்குமடி வலையால் மீன் பிடிக்க கூடுதல் நேரம் கோரிய இடையீட்டு மனு : தமிழக - மத்திய அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

சுருக்குமடி வலையால் மீன் பிடிக்க கூடுதல் நேரம் கோரிய இடையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-03-13 22:10 GMT

புதுடெல்லி,

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டது. அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜனவரி 24-ந்தேதி நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

அதன்படி வாரத்தில் 2 நாட்கள் அதாவது திங்கள், வியாழக்கிழமைகளில் மட்டும் இந்த இடைக்கால அனுமதி பொருந்தும்.

மீன்வளத்துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். காலை 8 மணிக்கு புறப்பட்டு அதிகபட்சம் மாலை 6 மணிக்குள் இந்த படகுகள் கரை திரும்ப வேண்டும் என நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

நேரம் போதாது

இதையடுத்து ஞானசேகர், மாரியப்பன் ஆகியோர் சார்பில் வக்கீல்கள் ஜெயசுகின், நரேந்திர குமார் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க நாள்தோறும் 10 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இது போதுமானதாக இல்லை. 12 கடல் மைல்களுக்கு அப்பால் சென்றடைவதற்கு 4 முதல் 6 மணி நேரம் ஆகிறது. மீன் பிடிக்கும் இடத்தை தேர்வு செய்ய 3 மணி நேரம் ஆகிறது, சுருக்குமடி வலையை விரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. மீன்கள் சிக்குவதற்கு காத்திருக்க 2 மணி நேரம் தேவை. கடலில் விரித்த வலையை மீண்டும் படகுக்கு கொண்டு வர 2 மணி நேரம் தேவை. மீண்டும் கடற்கரைக்கு திரும்ப 5 முதல் 8 மணி நேரம் ஆகிறது.

எனவே 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிக்குள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி 53 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி அளிக்கும் வகையில் உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்." என்று மனுவில் கூறியிருந்தனர்.

தமிழக அரசு - மத்திய அரசு பதில்

இந்த இடையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் விசாரித்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்ஜய் ஹெக்டே இந்த இடையீட்டு மனு தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை தெரிவித்தார்.

ஆனால், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீ்ல்கள் சிராஜுதின், ஜெய சுகின், இடையீட்டு மனு தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுவிட்டது, அவசர முறையீடும் முன்வைக்கப்பட்டு உள்ளதை குறிப்பிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இடையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில், மனுவை மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்