இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் திட்டம்... விரைவில் அறிமுகம்
இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் திட்டம் கொல்கத்தாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி ஆற்றின் அடியில் முதன்முறையாக மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, மேற்பரப்பில் இருந்து 33 மீட்டர் அடியில் அமைந்த நாட்டின் ஆழம் வாய்ந்த மெட்ரோ ரெயில் நிலையம் என்ற பெருமையை பெறுகிறது.
இந்த ரெயில் நிலையம் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது. மெட்ரோ ரெயில் இயக்கத்திற்காக இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்படும். இதனால், இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் திட்டம் இதுவாக இருக்கும்.
இதுபற்றி மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, இதற்காக இரண்டு பெட்டிகள், பேட்டரியால் இயங்க கூடிய ரெயிலில் வைத்து சீல்டா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்த இரு பெட்டிகளும், கொல்கத்தாவின் எஸ்பிளனேடு பகுதியில் இருந்து ஹவுரா மைதான் வரையிலான பகுதி வரையில், வரவிருக்கிற நாட்களில் ஆற்றின் அடியில் சோதனை ஓட்டம் மேற்கொள்ள செய்யப்படும்.
ரெயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு ஒப்புதல் பெறுவதற்காக, எஸ்பிளனேடு-ஹவுரா மைதான் பகுதியில் ரெயில் ஓட்ட பரிசோதனைகள் நடைபெறும். இந்த பெட்டிகள் ஹவுரா நிலையம் வழியே ஆற்றை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமை இந்த பணிகள் நடைபெறும் என திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் இந்த திட்டம் தள்ளிபோயுள்ளது. இதனால், வரவுள்ள நாட்களில் எஸ்பிளனேடு பகுதியில் இருந்து 4.8 கி.மீ. தொலைவிலுள்ள ஹவுரா மைதான் ரெயில் நிலையம் சென்றடையும்.
ஆற்றுக்கு அடியில் 16 கி.மீ. தொலைவிலான செக்டார் 5 முதல் ஹவுரா மைதான் வரையிலான பகுதியை இணைக்கும் வகையிலான கிழக்கு-மேற்கு மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.