நாளை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர்.;
நாளை தேர்தல்
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. எனவே இந்த பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆளும் கட்சியான பா.ஜ.க. தனது தரப்பில் திரவுபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளன.
நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற செயலக வளாகத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் நடைபெறும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர்.
இருவண்ண ஓட்டுகள்
இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஓட்டுசீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எம்.பி.க்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், எம்.எல்.ஏ.க்கு 'பிங்க்' நிற வாக்குச்சீட்டும் தரப்படும்.
தமிழகத்தில் நடக்கும் வாக்குப்பதிவுக்கான ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவின்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேர்தல் முகவர்களின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு சோதனை செய்யப்படும். வேட்பாளர்களின் முகவர்கள் யார்? யார்? என்பது இன்று தெரிய வரும்.
நாளை காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள குழு கூட்ட அறையில், மறைவு அமைக்கப்பட்டுள்ள மேஜை மீது ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். அங்கு வாக்குச்சீட்டு தரப்படும்.
2 எம்.பி.க்கள் யார்-யார்?
வாக்குப்பதிவு முடிந்ததும் அது சீலிடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். விமானத்தில் தனி சீட்டில் வைக்கப்பட்டு, துப்பாக்கி எந்திய பாதுகாவலரின் காவலுடன் இந்திய தேர்தல் கமிஷனுக்கு எடுத்து செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது முடிவுகள் அறிவிக்கப்படும்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் வேறு எந்த மாநிலத்திலும் வாக்கு செலுத்தலாம். அதற்கு தேர்தல் கமிஷனின் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் டெல்லிக்கு பதிலாக, நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ், ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கின்றனர்.
தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து வாக்களிக்கின்றனர். அவர்களின் வருகைக்காக தலைமைச் செயலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மக்களவை எம்.பி.க்களாக 39 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்களாக 18 பேரும் உள்ளனர்.
கொரோனா தொற்றிருந்தால்....
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும். அவர்கள் 'பிபிஇ கிட்' உடை அணிந்திருக்க வேண்டும். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் நாசர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சிவங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்திசிதம்பரம் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தொற்று ஏற்பட்டுள்ள இந்த 4 பேரை தவிர, தமிழகத்தைச் சேர்ந்த 231 எம்.எல்.ஏ.க்களும், தலைமைச் செயலகத்தில் வாக்களிக்க வரும் 2 எம்.பி.க்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்ற பிறகு இந்த 4 பேரும் அழைக்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு தரப்படும்.
தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.