பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற இங்கிலாந்து தூதர்: இந்தியா கடும் கண்டனம்
ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி,
பாகிஸ்தான் நாட்டிற்கான இங்கிலாந்து தூதர் ஜெனி மெரியட். இவர் கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மீர்பூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜெனி மெரியட் இது தொடர்பான புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஜெனி மெரியட் தனது டுவிட்டர் பதிவில், மீர்பூரில் இருந்து வணக்கம். இங்கிலாந்து - பாகிஸ்தான் மக்களிடையேயான இதயமே மீர்பூர் தான். இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தானியர்களில் 70 சதவிகிதம் பேர் மீர்பூருடன் தொடர்புடையவர்கள். புலம்பெயர்ந்தோர் நலன்களுக்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது. உங்களின் விருந்தோம்பலுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இங்கிலாந்து தூதர் ஜெனி மெரியட் சென்றதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரிடம் கண்டனத்தை தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து தூதர் ஜெனி மெரியட் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் பயணம் இந்திய இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.