டயாலிசிஸ் மையங்கள் எண்ணிக்கை 219 ஆக அதிகரிப்பு

கனகபுராவில் புதிய மருத்துவ கல்லூரி கட்டப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2023-07-07 20:26 GMT

பெங்களூரு:-

கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்து பேசியதாவது:-

டயாலிசிஸ் மையங்கள்

* எங்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில், அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளிலும் இலவச டயாலிசிஸ் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சேவைகளின் தரத்தை வலுப்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய டயாலிசர்ஸ் அறிமுகப்படுத்தப்படும். மாநிலத்தில் தற்போது உள்ள 173 டயாலிசிஸ் மையங்கள் 219 மையங்களாக அதிகரிக்கப்படும். இதற்காக ரூ.92 கோடி ஒதுக்கப்படுகிறது.

* கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 23 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமூக சுகாதார மையங்களாக மேம்படுத்தப்படும். சமூக சுகாதார மையங்கள் செயல்பட தேவையான உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை வழங்க ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* புதிதாக பிறக்கும் குழந்தைகள், குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும், விரிவான பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதார ஊழியர்களுக்கு கட்டிடம் கட்டப்படும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* 3 மாவட்டங்களில் நிமான்சுடன் இணைந்து 'மூளை சுகாதார முயற்சி' என்ற தனித்துவமான திட்டத்தை அரசு எடுத்துள்ளது. இந்த திட்டம்

வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு, ரூ.25 கோடி செலவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

ரத்த வங்கி மேலாண்மை

* 'ஆஷாகிரணா' என்ற புதிய திட்டத்தின் கீழ், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்புரை சிகிச்சை முகாம்கள், கண்ணாடி விநியோகம் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தலையீடுகள் போன்ற நடவடிக்கைகள் படிப்படியாக ஒரு பணி முறையில் மேற்கொள்ளப்படும். 2023-24-ல் இத்திட்டம் சித்ரதுர்கா, ராய்ச்சூர், உத்தர கன்னடா மற்றும் மண்டியா மாவட்டத்தில் ரூ.21 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* கதக், கொப்பல், கார்வார் மற்றும் குடகு மாவட்டங்களில் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 450 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படும்.

* ராஜீவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் விரிவுபடுத்தப்பட்டு ராமநகர் மாவட்டம் கனகபுராவில் புதிய மருத்துவ கல்லூரி கட்டப்படும்.

* மைசூரு, கலபுரகி மற்றும் பெலகாவி மாவட்டங்களில் ரூ.155 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் தீக்காய சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

* கலபுரகி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் ரூ.70 கோடி செலவில் 200 படுக்கைகள் கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்படும்.

* சித்ரதுர்கா மருத்துவ கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும்.

* பெங்களூரு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.5 கோடி செலவில் ரத்த வங்கி மேலாண்மை அமைப்பு தொடங்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்