புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழா: மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு
புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா,
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 1927- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டத்தின் பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.
இதன் தொடரச்சியாக புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி 2020, டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சுமார் 888 பேர் வரையும் , மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான பேர் அமரும் வகையிலும், இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி, வரும் 28-ம் தேதி புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி மதியம் 12 மணியளவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா முன்னிலையில் திறந்து வைக்கிறார். இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு வுிடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவை மேற்குவங்க முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.