மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தார்வார் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2022-10-29 19:00 GMT

உப்பள்ளி;

நடத்தையில் சந்தேகம்

தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா சலவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் மல்லப்பா. தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் விஸ்வநாத் தனது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி அன்று விஸ்வநாத் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி லட்சுமியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் விஸ்வநாத் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து லட்சுமியை பயங்கரமாக தாக்கி உள்ளார்.

கொலை வழக்கு

இதில் லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது லட்சுமியின் தாய், விஸ்வநாத்தை தடுக்க வந்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர் லட்சுமியின் தாயையும் தாக்கி உள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து நவலகுந்து போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கொலையான லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்த விஸ்வநாத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு தார்வார் மாவட்ட கோா்ட்டில் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணை நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில் நீதிபதி சோபா ராணி தீர்ப்பு வழங்கினார். அதில் மனைவியை கொலை செய்ததாக விஸ்வநாத் மல்லப்பா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்