ம.பி.யில், மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் - 11 பேர் மீது வழக்குப்பதிவு

மத்தியபிரதேசத்தில் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-06-08 02:58 GMT

கோப்புப்படம்

போபால்,

பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர். ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்