கோலாரில் தக்காளி ஒரு கிலோ ரூ.70-க்கு குறைய வாய்ப்பு

கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Update: 2023-08-04 22:29 GMT

கோலார் தங்கவயல்:-

கோலார் தக்காளி

கர்நாடகத்தில் கோலாரில் சாகுபடி செய்யும் தக்காளிகளுக்கு மவுசு அதிகம். இந்த தக்காளிகள் அனைத்தும் கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் பகுதியில் விற்பனைக்கு வருகிறது. இந்த தக்காளிகளை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்து லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். மேலும் வெளி நாடுகளுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோலார் ஏ.பி.எம்.சி. மார்கெட்டில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.2,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் தக்காளி வாங்குவதை குறைத்து கொள்ளவில்லை. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் கோலாரில் இருந்து அதிக விலைக்கு தக்காளியை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் தொடர் விலை உயர்வால், மக்கள் மத்தியில் தக்காளி மீதான மோகம் குறைந்தது. மாற்று காய்கறிகளான கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், பீட் ரூட், முட்டைகோஸ் வாங்கி சமையல் செய்ய தொடங்கினர். குறைந்த அளவே தக்காளிகளை வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினர். அதே நேரம் வெளி மாநிலத்தில் இருந்து வாங்கி செல்பவர்களும் கோலாார் மார்க்கெட்டிற்கு வருவதை நிறுத்தி கொண்டனர்.

ரூ.70 ஆக குறைய வாய்ப்பு

இதனால் தக்காளி விலை கிடுகிடுவென குறைய தொடங்கியது. அதாவது 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையும் என்று கூறப்படுகிறது. அதன்படி இவை ரூ.1000-க்கு கீழ் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கோலார் மாவட்ட வியாபாரிகள் கூறுகையில், கோலார் மாவட்டத்திற்கு வந்து வெளி மாநில வியாபாரிகள் பலர் தக்காளியை வாங்கி சென்றனர். தற்போது அவர்கள் கோலார் மார்க்கெட்டிற்கு வருவது இல்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே தக்காளியை வாங்கி செல்கின்றனர். அதேநேரம் விவசாயிகள் தக்காளியை அதிகளவு சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனர்.

ஒரு மாதத்தில் மார்க்கெட்டிற்கு கூடுதல் தக்காளி வர வாய்ப்பு உள்ளது. இதனால் ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படும் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, ரூ.1,000 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்