சிக்கமகளூரு மாவட்டத்தில், 2 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம்

சுதந்திர தினத்தையொட்டி சிக்கமகளூரு மாவட்டத்தில், 2 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-04 15:05 GMT

சிக்கமகளூரு;

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் ரமேஷ் தலைமையில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாட சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 15 ஆம் தேதி மாலை வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்ற 2 லட்சம் தேசிய கொடிகள் வினியோகிக்கப்பட உள்ளது.

அனைத்து தாலுகா மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேசியக்கொடி வழங்கப்படும். பின்னர் அங்கிருந்து தேசியக்கொடிகள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

தவிர்க்க வேண்டும்

அதேநேரத்தில் பாலிதீனில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடியை விற்பது, அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான முறையில் சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட பொறுப்பு மந்திரி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுவார். இதில் அனைத்து கலை நிகழ்ச்சிகள், போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு, போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்