சிக்கமகளூருவில், 4 நாட்களாக தொடர் கனமழை; சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

சிக்கமகளூருவில் 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-08 15:27 GMT

சிக்கமகளூரு;


பருவமழை

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் பருவமழை ெதாடங்கியது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. சிக்கமகளூரு தாலுகாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், அல்தூர் பகுதியில் உள்ள சாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடியது.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் அஜ்ஜாம்புரா செல்லும் சாலை, பங்கனகட்டே கிராமம் அருகே உள்ள தரைப்பாலத்திலும் போக்குவரத்து முடங்கியது. சிக்கமகளூருவில் கடந்த 3 மாதங்களில் 950 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளது.

30-க்கும் மேற்பட்ட குடிசைகள் நாசமாகின. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பனசங்கரி, சிவாஜி ரோடு ஆகிய பகுதிகளில் 30 வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. கலசா-பாலேஒன்னூர் இடையே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ரூ.25 ஆயிரம் செலவு

சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்தால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். விளைநிலங்களுக்குள் புகுந்த மழைநீரால் சாகுபடிக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமாகின.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், விவசாயத்திற்காக ரூ.25 ஆயிரம் செலவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்