பத்ராவதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு
பத்ராவதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒசமனே பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ஜான்சன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவுக்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் ஜான்சனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடி சென்றனர்.
பின்னர் வீடு திரும்பிய ஜான்சன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3½ லட்சம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜான்சன் ஒசமனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஒசமனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.