கவுகாத்தி ஐ.ஐ.டி. மாணவர் திடீர் மரணம்.. விடுதி அறையில் சடலமாக மீட்பு
ஐ.ஐ.டி.நிறுவனத்தின் அலட்சியத்தால் மாணவர் மரணம் அடைந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.;
கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்த மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு அந்த மாணவர், தனது விடுதி அறையில் இறந்து கிடந்துள்ளார். அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு மாணவர் வெளியில் சென்றுவிட்டார். இதைப் பார்த்த பாதுகாவலர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவர் கைப்பட எழுதிய குறிப்பையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மாணவனின் மரணம் குறித்து பீகாரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி.நிறுவனத்தின் அலட்சியத்தால் மாணவர் மரணம் அடைந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மன அழுத்தம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவரின் மரணம் குறித்து ஐ.ஐ.டி. சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், மாணவரின் தனியுரிமை மற்றும் இந்த சம்பவத்தின் உணர்வுபூர்வமான தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்று ஐ.ஐ.டி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.