இலவசங்கள் கொடுத்தால் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பெரும் சவால் ஏற்படும்

இலவசங்களை கொடுத்தால் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பெரும் சவால் ஏற்படும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Update: 2023-04-02 21:52 GMT

பெங்களூரு:-

வெளியே வரவில்லை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பெங்களூரு வந்துள்ளார். அவர் நேற்று கப்பன் பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் கலந்துரையாடினார். இதில் அவர் பேசியதாவது:-

மேற்கத்திய நாடுகள் பிற நாடுகளின் விஷயங்களில் அதாவது நமது ஒருமைப்பாடு, இறையாண்மை, சட்ட விஷயங்களில் தமது கருத்துக்களே மேலானவை என்று கருதும் மனநிலையில் இன்னும் வெளியே வரவில்லை. இதே நிலை தொடர்ந்தால் வேறு நாடுகள் மேற்கத்திய நாடுளின் விஷயத்தில் கருத்து கூற தொடங்குவது இயல்பானதாக இருக்கும்.

கருத்து கூறுகிறார்கள்

நமது நாட்டில் இருக்கும் சிலர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று நமது நாட்டை அவமதிக்கும் வகையில் பேசி அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் செயல்களால் தான் அவர்கள் நமது விஷயங்களில் கருத்து கூறுகிறார்கள். இத்தகைய மனநிலை கொண்ட நமது நாட்டில் உள்ளவர் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்க வேண்டியது அவசியம்.

இலவசங்கள் டெல்லியில் இருந்து தொடங்கி நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இது ஆபத்தான போக்கு. இலவசங்களை கொடுத்தால் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பெரும் சவால் ஏற்படும். தற்காலிக அரசியல் ஆதாயத்திற்காக அறிவிக்கப்படும் இலவச திட்டங்களால் யாரோ ஒருவர் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும். இலவச திட்டங்களுக்கு வேறு ஆதாரங்கள் மூலம் நிதி திரட்ட வேண்டும்.

பெரிய அளவில் ஆபத்து

பொறுப்பற்ற இலவச திட்டங்களால் நாட்டின் கஜானாவுக்கு பெரிய அளவில் ஆபத்து ஏற்படுகிறது. ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஜி20 நாடுகள் அல்லாது நாடுகளை தொடர்பு கொண்டு அந்த நாடுகளின் பிரச்சினைகளை கேட்டு அவற்றை தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதற்கு முன்பு ஜி20 நாடுகளின்

கூட்டம் 2, 3 நகரங்களில் தான் நடைபெறும். தற்போது 60 நகரங்களில் இத்தயை கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். இதன் மூலம் நமது பல்வேறு கலாசாரங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது தான் நோக்கம்.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் தொடர்பாக அமெரிக்கா, ஜெர்மனி நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து்ளது.


Tags:    

மேலும் செய்திகள்