வாக்குறுதிகளை நிறைவோற்றுவோம், மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் - சுக்விந்தர் சிங் சுக்கு பேட்டி
மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என இமாச்சல பிரதேச புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சுக்விந்தர் சிங் சுக்கு கூறியுள்ளார்.;
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்-மந்திரியாக காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழுவை வழிநடத்திய சுக்விந்தர் சிங் சுக்குவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
முகேஷ் அக்னிஹோத்ரி இமாச்சலபிரதேசத்தின் துணை முதல்-மந்திரியாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சுக்விந்தர் சிங் சுக்கு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மாநில மக்களுக்கு நன்றி எனது தெரிவித்துக் கொள்கிறேன். நமது அரசு மாற்றத்தை கொண்டு வரும். இமாச்சல பிரதேச மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எனது பொறுப்பு. நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்.
துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரியும் நானும் ஒரு குழுவாக செயல்படுவோம். 17 வயதில் எனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினேன். காங்கிரஸ் கட்சி எனக்காக செய்ததை என்னால் மறக்க முடியாது என்றார்.