பைக் வாங்க ரூ.70 ஆயிரம் தராததால் ஆத்திரம்: மனைவி முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவர்

பைக் வாங்க மாமனாரிடமிருந்து ரூ. 70 ஆயிரம் வரதட்சணையாக வாங்கி வரும்படி மனைவியிடம் அவர் கூறி வந்துள்ளார்.

Update: 2022-11-28 05:14 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியை சேர்ந்தவர் அமீர் கான். இவரது மனைவி ஹினா பர்வீன். தம்பதியர் அதேபகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இதனிடையே, பைக் வாங்க வேண்டும் இதற்காக மாமனாரிடமிருந்து வரதட்சணை ரூ.70 ஆயிரம் வாங்கி வரும்படி அமீர் தனது மனைவி ஹினாவை வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், ஹினாவை அமீர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், கடந்த சனிக்கிழமை ஹினா தனது தந்தை வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். பணத்தை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக ஹினாவின் தந்தை கூறியுள்ளார்.

இதையடுத்து, நேற்று ஹினா தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பைக் வாங்க வரதட்சணையாக கேட்ட ரூ.70 ஆயிரம் பணம் எங்கே என்று கேட்டுள்ளார். பணத்தை விரைவில் கொடுப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்த அமீர் தனது மனைவி ஹினாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஆசிட்டை அமீர் தனது மனைவி ஹினாவின் முகத்தில் ஊற்றினார். ஆசிட் வீச்சால் அதிர்ச்சியடைந்த ஹினா அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அமீர் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த ஹினாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முகம் உள்பட பல்வேறு உடல்பாகங்களில் ஆசிட் பட்டதால் படுகாயமடைந்த ஹினாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹினாவின் வாய்க்குள் ஆசிட் ஊற்றியதால் அவரால் பேச முடியவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச்சென்ற அமீரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்