இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் கோடிகளில் புரளும் 5 வேட்பாளர்கள்: ருசிகர தகவல்கள்

இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் 5 பெரும்பணக்கார வேட்பாளர்கள் கோடிகளில் புரள்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

Update: 2022-10-29 01:19 GMT

சிம்லா,

இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் 5 பெரும்பணக்கார வேட்பாளர்கள் கோடிகளில் புரள்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

சட்டசபை தேர்தல்

இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு 68 இடங்களை கொண்ட சட்டசபையின் ஆயுள் ஜனவரி 8-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய சட்டசபை அமைக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அங்கு வேட்பு மனுதாக்கல் முடிந்து விட்டது. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று (29-ந் தேதி) கடைசி நாள் ஆகும். ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன.

கோடீசுவர வேட்பாளர்கள்

740 வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். சிறிய மாநிலமாக இமாசலபிரதேசம் இருந்தாலும், இங்கு கோடிகளில் புரள்கிற வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது தேர்தல் அரசியல் களத்தை அதிர வைப்பதாக அமைந்துள்ளது.

இங்கு போட்டியில் இறங்கியுள்ள வேட்பாளர்களில் 5 பேர் பெரும் பணக்காரர்கள். அவர்களில் ஒருவர் பா.ஜ.க., எஞ்சிய 4 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள் இவை:-

முதல் இடம் வகிக்கும் பணக்காரர்

* சோபால் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் களம் இறங்கி உள்ள நடப்பு எம்.எல்.ஏ.வும், கட்டுமான தொழில் அதிபரும், ஆப்பிள் விவசாயியுமான பல்வீர் வர்மா என்ற பிட்டுதான் மிகப்பெரும் பணக்கார வேட்பாளர் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.125 கோடி ஆகும்.

இவருக்கு ரூ.4.31 கோடி அசையும் சொத்துககள், ரூ.121.40 கோடி அசையா சொத்துக்கள் உள்ளன. மெர்சிடஸ்பென்ஸ், பி.எம்.டபிள்யு உள்ளிட்ட பல சொகுசுக்கார்களின் சொந்தக்காரர் இவர்.

* நாக்ரோட்டா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதன்முதலாக தேர்தல் களம் இறங்கி உள்ள ரகுபீர் சிங் பாலி, 2-வது பெரிய பணக்கார வேட்பாளர். இவரது தந்தை ஜி.எஸ். பாலி முன்னாள் மந்திரி ஆவார். ரகுபீர் சிங் பாலிக்கு ரூ.104 கோடி சொத்துக்கள் உள்ளன. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.13.07 கோடி. அசையாச்சொத்துக்களின் மதிப்பு ரூ.90.34 கோடி. மெர்சிடஸ் பென்ஸ் கார், இவருக்கும் உள்ளது.

முன்னாள் முதல்-மந்திரி மகன்

* 6 முறை முதல்-மந்திரி பதவி வகித்த வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங், 3-வது பெரிய பணக்காரர். இவர் 2-வது முறையாக காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்கிறார். சிம்லா ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.102 கோடி. அசையா சொத்துக்கள் ரூ.90.34 கோடி, அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.6.97 கோடி. இவரது மனைவி அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரி சுதர்சன் தேவி ஆவார். இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என தெரியாது என்றே கூறப்பட்டுள்ளது.

* சோபால் தொகுதியில் பா.ஜ.க.வின் பல்வீர் வர்மா என்ற பிட்டுவை எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ரஜ்னீஷ் கிம்டா 4-வது பெரிய பணக்காரர். இவர் முதல் முறையாக தேர்தலில் நிற்கிறார்.

இவரது சொத்து மதிப்பு ரூ.31.25 கோடி. இவரிடமும் மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் இருக்கின்றன. இவரிடமும், இவரது மனைவியிடமும் சேர்த்து ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் இருக்கின்றன.

பரம்பரைச் சொத்து அதிகம்

* 5-வது பெரிய பணக்கார வேட்பாளர், ஆஷிஷ் புட்டெயில் ஆவார். இவர் முன்னாள் சபாநாயகர் பி.பி.எல்.புட்டெயிலின் மகன் ஆவார். பாலாம்பூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டி போடுகிறார். இவரது சொத்து மதிப்பு ரு.30.25 கோடி. அசையும் சொத்து மதிப்பு ரூ.69 லட்சம். அசையா சொத்து சுமார் ரூ.63 லட்சம். மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 1.66 கோடி. ரூ.27 கோடி பரம்பரைச் சொத்து உள்ளது.

இவர்கள் இந்த மாநில தேர்தல்களத்தை கலக்கி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்