ஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. தவறான பழக்கத்தால் வந்த வினை

திரிபுராவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-10 08:32 GMT

அகர்தலா,

உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக இருக்கிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் பேர் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் இதன் பாதிப்பு புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது. அதாவது, திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் திரிபுரா எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில்தான் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சோகமான விஷ்யம் என்னவென்றால், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் உயிரிழந்துவிட்டனர் என்பதுதான். மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து மாணவர்கள் படிக்க சென்றிருக்கிறார்கள். எனவே அவர்களையும் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

"பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு போதை பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் தான் தொற்று பரவியிருக்கிறது. எனவே அனைவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஒரே மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 800க்கும் அதிகமானோர் எய்ட்ஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்