வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை: அசாம் முதல்-மந்திரி
வங்காளதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அந்நாட்டு அரசை வலியுறுத்தும்படி பிரதமரிடம் கேட்டு கொண்டுள்ளோம் என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
சில்சார்,
வங்காளதேசத்தில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு செய்யும் விவகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்த ஜூலையில் தீவிரமடைந்தது. இதன்பின்னர், கடந்த 5-ந்தேதி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 300 பேர் வரை பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகினார். டாக்கா அரண்மனையை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன்பின்பும் போராட்டம் தீவிரமடைந்து, பலர் உயிரிழந்தனர். மொத்தத்தில் வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இதனால், அந்நாட்டில் இருந்து பலரும் பாதுகாப்பை தேடி பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல தொடங்கினர். இந்த சூழலில், அந்நாட்டையொட்டி அமைந்துள்ள அசாமின் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, இந்துக்கள் வங்காளதேசத்திலேயே தங்கியிருந்து, போராடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இந்து நபர் ஒருவர் கூட கண்டறியப்படவில்லை.
ஆனால், கடந்த ஒரு மாதத்தில், அண்டை நாட்டில் இருந்து வேலைவாய்ப்பை பெறும் நோக்கில், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற முஸ்லிம்கள் 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எனினும், அவர்கள் அசாமுக்குள் வரவில்லை. பெங்களூரு, தமிழகம், கோவையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக அவர்கள் செல்ல முயன்றுள்ளனர் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வங்காளதேச அரசை வலியுறுத்தும்படி பிரதமரிடம் நாங்கள் வேண்டுகோளாக கேட்டு கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.