'ஆதிபுருஷ்' படத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் இந்து சேனா அமைப்பு மனு

இந்து கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் 'ஆதிபுருஷ்' படம் அமைந்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2023-06-17 17:16 GMT

புதுடெல்லி,

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர மக்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருப்பதாக கூறி பலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படத்திற்கு எதிராக இந்து சேனா தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ராமர், ராமாயணம் மற்றும் இந்து கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் 'ஆதிபுருஷ்' படம் அமைந்துள்ளதாகவும், படத்தில் கதாபாத்திரங்கள் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிட்டதற்குப் பொருந்தாமல் உள்ளது என்றும், ஆகையால் படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்