காஷ்மீரில் தரம் மிக்க லித்தியம் கண்டுபிடிப்பு

பெருமளவிலான லித்தியம் படிவு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Update: 2023-02-12 04:29 GMT

ஜம்மு,

மின்சார வாகனங்கள், சூரியசக்தி மின்தகடுகள் தயாரிப்பில் பயன்படும் மிக முக்கிய தாதுப்பொருளாக லித்தியம் உள்ளது. இதில் நூறு சதவீதம் இறக்குமதியை சார்ந்தே இந்தியா இருக்கிறது. இந்நிலையில், சிறந்த தரத்திலான, பெருமளவிலான லித்தியம் படிவு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அங்குள்ள ரியாசி மாவட்டத்தில், வைஷ்ணவி தேவி கோவில் மலை அடிவாரத்தில் சலால் என்ற கிராமப்பகுதியில் இந்த லித்தியம் படிவுகளை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அங்கு சுமார் 60 லட்சம் டன் லித்தியம் படிவு புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புவியியல் ஆய்வு நிறுவன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், லித்தியம் கிடைக்கும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு இது உதவிசெய்யும் என அவர்கள் கூறினர். தற்போது சீனாவின் லித்தியம் இருப்பையும் இந்தியா தாண்டிவிடும் என்று அந்த அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டுகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு லித்தியம் தாதுப்பொருளை வெட்டி எடுக்கும் பணி தொடங்கும் என புவியியல் ஆய்வு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

லித்தியம் படிவு கண்டுபிடிப்பு குறித்து சலால் கிராம மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதனால் உள்ளூர் வாலிபர்கள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்