ஆந்திர பிரதேசத்தில் கனமழை, வெள்ளம்... தென்னந்தோப்பு வழியே படகில் சென்று மணமகனை கரம்பிடித்த மணமகள்

ஆந்திர பிரதேசத்தில் கனமழையில் அனைத்து சாலைகளும் வெள்ள காடான போதும் தென்னந்தோப்பு வழியே படகில் சென்ற மணமகள், மணமகனை கரம் பற்றியுள்ளார்.

Update: 2022-07-16 05:49 GMT

கொனசீமா,



ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கோதாவரி, எலூரு, கொனசீமா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்களுக்கு முன் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கொனசீமா மாவட்டத்தில் 51 கிராமங்களை சேர்ந்த 1.51 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கொனசீமா மாவட்டத்தில் 37 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. வெள்ளம் பாதித்த மக்களை தங்க வைக்க அவை புனரமைப்பு மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், கொனசீமா மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கும், அருகேயுள்ள ஊரில் உள்ள நபருக்கும் திருமணம் செய்ய முன்பே நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கனமழையால் நகரெங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் மணமகள் குடும்பத்தினர் திகைத்துபோய் நின்றனர்.

அனைத்து சாலைகளும் வெள்ளநீரில் மூழ்கி காணப்பட்டன. இதனை தொடர்ந்து, படகு ஒன்றில் பயணம் செய்து, மணமகன் வசிக்கும் பகுதிக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஆந்திர பிரதேச பேரிடர் மீட்பு படையினர் உதவி செய்ய முன்வந்தனர். அவர்கள் உதவியுடன் இரண்டு படகுகளில், மணப்பெண், அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் புறப்பட்டனர். நீரால் சூழப்பட்ட தென்னந்தோப்பு வழியே படகு பயணித்தது. ஒரு வழியாக மணமகன் ஊருக்கு சென்று சேர்ந்து அவரை மணமகள் திருமணம் செய்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்