பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை!
பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
பெங்களூரு:
கொட்டி தீர்த்த கனமழை
பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெலகாவி, துமகூரு, தாவணகெரே, கதக், ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் இரவும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்திருந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று இரவும் கனமழை கொட்டி தீர்த்தது. ராஜாஜிநகர், விதானசவுதா, மெஜஸ்டிக், மல்லேசுவரம், ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டியது.
கனமழை காரணமாக நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுகள் போல ஓடியது. சாலைகள் தெரியாத வண்ணம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பரிதவித்தார்கள். குறிப்பாக அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இரவில் வேலை முடிந்து இருசக்கர வாகனங்களில் சென்ற ஊழியர்கள் மழையில் சிக்கி கொண்டு வீட்டுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
போக்குவரத்து நெரிசல்
கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் கே.ஆர்.புரம் டின்பேக்ரி முன்பாக உள்ள சாலை, விதானசவுதா சுற்றியுள்ள சாலைகள், மெஜஸ்டிக் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முன் பின் நகர முடியாமல் பரிதவித்தனர். தாழ்வான பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இரவில் தூங்க முடியாமல் பரிதவித்தார்கள்.
ராஜகால்வாய் பகுதிகளையொட்டி இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது