விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியஅரசு அதிகாரி கைது
கடூரில், பட்டா மாற்றம் செய்து கொடுக்க விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த குமாஸ்தாவையும் லோக் அயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சிக்கமகளூரு-
வருவாய் துறை அதிகாரி
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பீரூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரியாக இருந்து வருபவர் யோகேஷ்(வயது 49). அதே அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்து வருபவர் தம்மய்யா. இந்த நிலையில் கடூர் டவுன் பகுதியில் வசித்து வரும் ஒரு விவசாயி, தனது தந்தையின் பெயரில் இருக்கும் நிலப்பட்டாவை தன்னுடைய பெயருக்கு மாற்றித்தரும்படி கோரி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் பரிசீலனைக்காக அதிகாரி யோகேசிடம் வந்தது. அப்போது அவர் தனக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக இந்த பணியை செய்து கொடுப்பதாக அந்த விவசாயியிடம் கூறினார்.
ரூ.8 ஆயிரம் லஞ்சம்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி, இதுபற்றி மாவட்ட லோக் அயுக்தாவில் புகார் செய்தார். அதன்பேரில் லோக் அயுக்தா போலீசார் சில அறிவுரைகளை வழங்கி, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்து, அதை அதிகாரி யோகேசிடம் கொடுக்குமாறு கூறினர்.
அதன்பேரில் அவர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த குமாஸ்தா தம்மய்யா, விவசாயியிடம் இருந்து லஞ்சப்பணத்தை வாங்கினார்.
கைது
அந்த சந்தர்ப்பத்தில் அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார், அதிகாரி லோகேஷ், குமாஸ்தா தம்மய்யா ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து லோக் அயுக்தா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.