தொழில் அதிபர் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளை
சித்ரதுர்காவில், தொழில் அதிபரின் மகன், மருமகனை பிணை கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காரில் தப்பிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:-
தொழில் அதிபர்
சித்ரதுர்கா (மாவட்டம்) டவுன் வங்கி ஊழியர்கள் காலனியில் வசித்து வருபவர் நசீர் அகமது. தொழில் அதிபரான இவர் அப்பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கடந்த 8-ந் தேதி அன்று காலை 9.20 மணியளவில் நசீர் அகமது வழக்கம்போல் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மகன் சமீர், மருமகன் ஷாஜகான் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் 3 பேர் கும்பல் நசீர் அகமதுவின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அதைப்பார்த்த நசீர் அகமதுவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.50 லட்சம் கொள்ளை
பின்னர் அந்த மர்ம நபர்கள் 3 பேரும், நசீர் அகமதுவின் மகன் சமீர், மருமகன் ஷாஜகான் ஆகிய 2 பேரையும் பிணைக் கைதிகளாக பிடித்து துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினரை மிரட்டினர். மேலும் வீட்டில் இருந்த 120 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். அதுமட்டுமின்றி ரூ.50 லட்சம் தருமாறும், இல்லையேல் அவர்கள் 2 பேரையும் கொன்றுவிடுவோம் என்றும் குடும்பத்தினரிடம் மிரட்டினர்.
இதையடுத்து அவர்கள் தங்களது உறவினர்களிடம் செல்போனில் பேசி ரூ.25 லட்சத்தை ஏற்பாடு செய்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.25 லட்சத்தையும் கொடுத்தனர். அதையடுத்து அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சமீர் மற்றும் ஷாஜகான் ஆகிய 2 பேரையும் காரில் கடத்திக் கொண்டு தாவணகெரேவுக்கு சென்று அங்கு நசீர் அகமதுவின் உறவினர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். அதையடுத்து அவர்கள் சமீரையும், ஷாஜகானையும் விடுவிக்காமல் காரிலேயே மீண்டும் கடத்திக் கொண்டு சன்னகிரி வழியாக சென்றனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதற்கிடையே தகவல் அறிந்து வீடு திரும்பிய நசீர் அகமது இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தாவணகெரே, சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் சந்தேபென்னூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை விரட்டிச்சென்று சிக்கபிகரே பகுதியில் வைத்து மடக்கினர். அப்போது காரில் இருந்து 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
அதையடுத்து போலீசார் அந்த காரில் கடத்தி வரப்பட்ட சமீரையும், ஷாஜகானையும் மீட்டனர். மேலும் பிடிபட்ட நபரிடம் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கம், 120 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இதற்கிடையே இச்சம்பவம் பற்றி பாரங்கே போலீசில் நசீர் அகமது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். சினிமாவை மிஞ்சும் வகையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.