ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருவாய் அதிகரிப்பு - நிர்மலா சீதாராமன் பாராட்டு
ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மாநிலங்களின் வருவாய் பெருக்கத்தை அதிகரிக்க ஜி.எஸ்.டி. உதவியிருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. தினத்தையொட்டி அவர் கூறுகையில், 'ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவின் மறைமுக வரி அமைப்பு துண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் தொழில்துறை மற்றும் நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான சந்தையாக இருந்தது' என தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி.க்கு முன்பு மாநிலங்களின் வருவாய் பெருக்கம் 0.72 ஆக இருந்ததாக கூறியுள்ள நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.க்கு பின்னர் இது 1.22 ஆக உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி. மிகப்பெரும் வருவாய் பெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதன் மூலம் மத்திய அரசும், மாநிலங்களும் பலனடைவதாகவும் நிர்மலா சீதராமன் தெரிவித்தார். ஜி.எஸ்.டி. அமலுக்குப்பின் எந்த மாநிலத்தின் வருவாயும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.