கத்தியால் குத்தி மளிகை கடை உரிமையாளர் தற்கொலை

கடன் தொல்லையால் மளிகை கடை உரிமையாளர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-05 18:45 GMT

வஜ்ரஹள்ளி:-

மளிகை கடை உரிமையாளர்

பெங்களூரு வஜ்ரஹள்ளி பகுதியை சோந்தவர் பிரபாகர் குப்தா(வயது 32). மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவியும் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று இருந்தார்.

ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் மனமுடைந்தது காணப்பட்டார். இதுதொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், அவரது மனைவி வேலைக்கு சென்றுவிட்டார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றன. இந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த பிரபாகர் குப்தா, கத்தியை எடுத்து தனது உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்திக்கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே வேலைக்கு சென்ற அவரது மனைவி வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது கணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

கடன் தொல்லை

மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபாகர் குப்தா உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் குடியேறி மளிகை கடை நடத்தி வந்ததும் தெரிந்தது.

மேலும் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் மளிகை கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்