சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: டெல்லி அரசு அதிகாரி, மனைவிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
டெல்லியைச் சேர்ந்த அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வரும் பிரேமோதய் என்ற நபர், தனது நண்பரின் 17 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
போக்சோ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பிரேமோதய் மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் பிரேமோதய்க்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாகக் கூறி அவரது மனைவி சீமா ராணியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பிளஸ் 2 படிக்கிறார் என்றும் அவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சிறுமியின் தந்தை இறந்த பிறகு பிரேமோதய் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கு இடையில் அவர் பல முறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிகிச்சையில் உள்ளார். அவரது வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன், பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்ப்பட்ட பிரேமோதய் மற்றும் அவரது மனைவி சீமா ராணி இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரது நீதிமன்ற காவலையும் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து கூடுதல் செஷன்ஸ் (போக்சோ)கோர்ட்டு நீதிபதி ரிச்சா பரிஹார் உத்தரவிட்டுள்ளார்.