காட்டு யானை தாக்கி பெண் சாவு

ராமநகர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பரிதாபமாக செத்தார். மேலும் அவரது தங்கை படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2023-06-19 21:18 GMT

ராமநகர்:

பெண் பரிதாப சாவு

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா அச்சலு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (வயது 50). இவரது தங்கை வெங்கடலட்சுமம்மா (45). இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு விவசாய வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அச்சலு அருகே இந்திராநகர் பகுதியில் சென்ற போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அங்கு வந்துள்ளது. இதை பார்த்ததும் ஜெயம்மாவும், வெங்கடலட்சுமம்மாவும் தப்பி ஓட முயன்றனர். இதில் இருவரையும் யானை தும்பிக்கையால் பிடித்து வீசியதுடன், காலால் மிதித்தது. இதில் ஜெயம்மா உடல் சிதைந்து பலியானார்.

தங்கை படுகாயம்

மேலும் வெங்கடலட்சுமம்மா பலத்த காயம் அடைந்து காப்பாற்றும்படி அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஓடி விட்டது. இதையடுத்து அந்த தொழிலாளர்கள், வெங்கடலட்சுமம்மாவை மீட்டு சிகிச்சைக்காக கனகபுரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், யானை தாக்கியதில் பலியான ஜெயம்மா உடலை மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலியான ஜெயம்மா குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராமநகர் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 3-வது முறையாக காட்டு யானை தாக்கி ஜெயம்மா உயிரிழந்துள்ளார். கடந்த 15 நாட்களில் 3 பேர் காட்டு யானை தாக்குதலில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்