2 நாள் பயணமாக ஜெர்மனி பிரதமர் நாளை இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் பிரதமர் ேமாடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
இந்தியா-ஜெர்மனி இடையே அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை நெறிமுறை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த அமைப்பு உருவாக்கிய பிறகு முதல் முறையாக தனிநபர் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் நாளை (சனிக்கிழமை) காலை இந்தியா வருகிறார். அவரது இந்த 2 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளன.
அந்தவகையில் டெல்லி வந்திறங்கும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஒப்பந்தம் நிறைவேறும்
பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிலும் ஒப்பந்தங்கள் கைமாறப்படுகின்றன. அத்துடன் கூட்டாக அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் வர்த்தக சந்திப்பு ஒன்றில் ஓலாப் ஸ்கோல்ஸ் பங்கேற்கிறார்.
பிற்பகல் ராஜ்காட் செல்லும் ஜெர்மனி பிரதமர், அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுகிறார்.
பெங்களூரு வருகிறார்
தனது 2-வது நாள் (26-ந்தேதி) பயணத்திலும் ஜெர்மனி பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அன்று காலையில் பெங்களூரு வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மாலையில் அவர் ஜெர்மனி திரும்புகிறார்.
பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமரும் கடந்த ஆண்டு 3 முறை சந்தித்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் ஜெர்மனியும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை பகிர்ந்து வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக ஜெர்மனி உள்ளது. மேலும் இந்தியாவின் முதல் பத்து உலக வர்த்தக நட்பு நாடுகளில் தொடர்ச்சியாக ஜெர்மனியும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.