ஜி20 தலைமை பதவி, மிகப்பெரிய பொறுப்பு, உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம் - பிரதமர் மோடி

உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஜி20 தலைமை பதவி, மிகப்பெரிய பொறுப்பு என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-01-09 17:44 GMT

இந்தியாவின் தூதர்கள்

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சூரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா நாட்டு அதிபர் முகமது இர்பான் அலி தலைமை விருந்தினராகவும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

புலம்பெயர்ந்த இந்தியர்களை வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தூதர்களாக நான் பார்க்கிறேன். யோகா, ஆயுர்வேதம், குடிசை தொழில், கைவினை பொருட்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றுக்கும் அவர்கள் தூதர்களாக திகழ்கிறார்கள்.

அறிவுசார் மையம்

நாடு சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய 25 ஆண்டுகால பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்த பயணத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்தியாவின் உலகளாவிய பார்வையும், உலக வரிசையில் அதன் முக்கிய பங்கும் உங்களால் மேலும் வலுப்படுத்தப்படும்.

இந்தியா அறிவுசார் மையமாக மட்டுமின்றி, திறமையின் தலைநகராகவும் மாறும் திறன் படைத்தது. இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உளளனர்.

புலம்பெயர்ந்த இந்தியர்கள், தாங்கள் குடியேறிய நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதுபற்றி இந்திய பல்கலைக்கழகங்கள் ஆவணங்களையும், ஒலி, ஒளிக்காட்சிகளையும் தயாரிக்க வேண்டும்.

சக்தி அதிகரிக்கும்

ஜி20 தலைமை பதவி, இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு. இந்தியாவை பற்றி உலகத்துக்கு சொல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்று இந்தியாவின் குரலுக்கும், வார்த்தைகளுக்கும் உலக அரங்கில் மாறுபட்ட முக்கியத்துவம் உள்ளது. வளர்ந்து வரும் இந்தியாவின் சக்தி, இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்.

உள்நாட்டிலேயே நாம் கொரோனா தடுப்பூசி தயாரித்து, 220 கோடி தடுப்பூசிகளை இலவசமாக போட்டுள்ளோம். பொருளாதாரத்தில் 5-வது இடத்தையும், அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொண்ட நாடுகளில் 3-வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.

மின்னணு பரிமாற்றம்

இந்தியா என்ன செய்கிறது, எப்படி செய்கிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் பார்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வேகமான வளர்ச்சியும், சாதனைகளும் அசாதாரணமானவை. முன்எப்போதும் இல்லாதவை.

உலகில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களில், 40 சதவீதம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. அதிநவீன விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரே நேரத்தில் 100 செயற்கை கோள்களை ஏவி சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பேச்சுவார்த்தை

இந்த மாநாட்டுக்கு வந்துள்ள சூரிநாம் அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி, கயானா அதிபர் முகமது இம்ரான் அலி ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

சந்தோகியுடனான பேச்சுவார்த்தையின்போது, பரஸ்பர நலன்சார்ந்த ஹைட்ரோகார்பன், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மின்னணு தொழில்நுட்பம், திறன் கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தார்.

சூரிநாம் நாட்டின் கடன்களை மறுசீரமைத்தற்காக இந்தியாவுக்கு சந்தோகி பாராட்டு தெரிவித்தார்.

கயானா அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது, எரிசக்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மருந்தியல் பொருட்கள், ஆரோக்கியம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது குறித்து பிரதமர் விவாதித்தார்.

இருநாட்டு மக்களிடையிலான 180 ஆண்டுகால நட்புறவை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்