ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-08-28 11:16 GMT

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது என தெரிவித்தார். ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் வங்கி கணக்கில் உள்ள பணம் பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்