இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக்கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-12-10 16:54 GMT

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழலில் 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

இதனிடையே தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் நான்காவது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும். இந்தியா ஒற்றுமையாக இருக்கும். இந்தியா வெல்லும்" என்று அதில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார், தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம், சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்