எரிசக்தி துறையில் இந்தியா-அமீரகம் இடையே 4 முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்தியா- ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களுக்கிடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Update: 2024-09-09 12:22 GMT

புதுடெல்லி:

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியா வந்துள்ளார். அவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு துறை மந்திரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியா வந்துள்ளது.

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

அதன்பின்னர், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்தியா- ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை வருமாறு:-

1. அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இடையே நீண்ட கால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தம்.

2. அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி மற்றும் இந்தியாவின் முக்கிய பெட்ரோலிய இருப்புக்களை பராமரிக்கும் ஐ.எஸ்.பி.ஆர்.எல். நிறுவனம் இடையிலான ஒப்பந்தம்.

3. பராக்கா அணுமின் நிலைய செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக, எமிரேட்ஸ் அணுசக்தி நிறுவனம் (ENEC) மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) இடையிலான ஒப்பந்தம்.

4. உர்ஜா பாரத் மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி இடையே அபுதாபி ஆன்ஷோர் பிளாக்-ஒன் உற்பத்தி சலுகை ஒப்பந்தம்.

இதுதவிர, இந்தியாவில் உணவுப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக குஜராத் அரசுக்கும் அபுதாபி டெவலப்மென்டல் ஹோல்டிங் கம்பெனி PJSC-க்கும் இடையே ஒரு தனி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்துள்ளது. 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய பிரதமர் மோடியின் அமீரக சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் அடுத்த கட்டத்திற்கு விரிவடைந்தது.

எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் அமீரக திர்ஹாம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டு ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் லோக்கல் கரன்சி செட்டில்மென்ட் (LCS)அமைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 85 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன.

இந்தியாவில் 2022-23ல் அதிக அளவு அன்னிய நேரடி முதலீடுகள் செய்த முதல் நான்கு முதலீட்டாளர்களில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கு ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பு அழைப்பாளராக அழைத்து கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்