பண்ட்வால் வனப்பகுதியில் 4 இடங்களில் காட்டுத்தீ
பண்ட்வால் வனப்பகுதியில் 4 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின.
மங்களூரு:-
பண்ட்வால் வனப்பகுதியில் காட்டுத்தீ
கர்நாடகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகாவில் உள்ள வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
பண்ட்வால் வனப்பகுதியில் 4 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதாவது, தாளப்பாடி, மொடங்காப், சரபாடி, புஞ்சலகட்டே ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு மரங்கள்,செடி-கொடிகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதுபற்றி அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போராடி அணைப்பு
அதன்பேரில் வனத்துறையினர் தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். பண்ட்வாலில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் இருப்பதால், மங்களூருவில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 4 இடங்களிலும் காட்டுத்தீ அணைக்கப்பட்டது. ஆனாலும், 4 இடங்களிலும் 20 ஏக்கரில் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின.
இதில் வனவிலங்குகள் எதுவும் சிக்கி உயிரிழந்ததா என்பது தெரியவில்லை. கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.