அசாமில் வெள்ளம்; 29 மாவட்டங்களில் 7.17 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 29 மாவட்டங்களை சேர்ந்த 7.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-05-19 16:21 GMT

கவுகாத்தி,

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையையொட்டி நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சத்து 17 ஆயிரத்து 46 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் மற்றும் நில சரிவுக்கு 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

1,413 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நகாவன் மாவட்டம் அதிகம் பாதிப்பிற்கு இலக்காகி உள்ளது. 2.88 லட்சம் பேர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கச்சார் மாவட்டத்தில் 1.2 லட்சம் பேரும், ஹொஜய் மாவட்டத்தில் 1.07 லட்சம் பேரும் பாதிப்படைந்து உள்ளனர்.

அசாமின் கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.

இந்த வெள்ள பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர் மழையால் தீம ஹசாவோ மாவட்டத்தின் 12 கிராமங்களில் நில சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, 55 நிவாரண முகாம்கள் மற்றும் 12 வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, 1,400க்கும் கூடுதலான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. மொத்தம் 200க்கும் கூடுதலான வீடுகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன.

ஹொஜய், லகீம்பூர் மற்றும் நகாவன் மாவட்டங்களில் பல்வேறு சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நியூ கஞ்ஜங், பியாங்புய், மவுல்ஹோய், நம்ஜேஉராங், தெற்கு பகிதர், மகாதேவ் தில்லா, காளிபாரி, வடக்கு பகிதர், ஜியான் மற்றும் லோடி பங்மவுல் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. நிலச்சரிவுகளால் ஜதிங்கா-ஹரங்காஜாவோ மற்றும் மஹூர்-பியாதிங் பகுதிகளில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகாவன் மாவட்டத்தில் மட்டும் 2.88 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர் என அசாம் பேரிடர் மேலாண் கழகம் இன்று அறிவித்து உள்ளது. 3 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 147 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த மாவட்டத்தில் 9,742.57 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன. கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து ஓடும் வெள்ளநீரால் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரால் மூழ்கியுள்ள சூழல் ஏற்பட்டு உள்ளது. அதனால் காம்பூர் பகுதியை இணைக்க கூடிய பல்வேறு சாலைகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனால், மக்கள் பெரும் அவதி அடைந்து உள்ளனர்.

நகாவன் மாவட்டத்தில் காம்பூர்-கதியாதலி இணைப்பு சாலையின் ஒரு பகுதி வெள்ள நீரில் இன்று காலை அடித்து செல்லப்பட்டு உள்ளது. அசாமின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்