காலாவதியான காங்கிரஸ் உத்தரவாதம் அட்டை கொடுக்கிறது

இலவச வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், காலாவதியான காங்கிரஸ் உத்தரவாதம் அட்டை கொடுப்பதாகவும் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

Update: 2023-04-27 22:21 GMT

தீவிரமாக பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. தேர்தல் களத்தில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்), ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உள்பட 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

இதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜனதா சார்பில் உள்துறை மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மாநில நிர்வாகிகளும் உள்ளிட்ட தலைவர்களுடன், ஜனதா தளம் (எஸ்) சார்பில் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரதமரிடம் கேள்வி

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) குதிக்கிறார். அதற்கு முன்னதாக அவர் நேற்று டெல்லியில் இருந்தபடி கர்நாடகத்தை சேர்ந்த 50 லட்சம் பா.ஜனதா செயல்வீரர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில் கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகா தலைநகரங்கள் 635 இடங்களில் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி காணொலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் 'நமோ' செயலி மூலம் காணொலியில் கலந்து கொண்டனர். இதில் தொண்டர்கள் 15 பேர் பிரதமரிடம் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும். பூத் கமிட்டி மட்டத்தில் 10 ஆண்கள், 10 பெண்களை சேர்த்து இரட்டை என்ஜின் அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்து கூற வேண்டும். மூத்தவர்களை கவுரவிக்க வேண்டும். இளைஞர்களிடம் அன்புடன் பேசவேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் ஏழ்மை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள்.

இரட்டை என்ஜின் அரசு

ஆனால் நமது அரசியல் எதிரிகளுக்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே மட்டுமே குறிக்கோள். பெங்களூருவில் உள்ளது போல் மாநிலத்தின் பிற பகுதிகளில் புதிய தொழில்கள் தொடங்கும் நிலை உருவாக வேண்டும். தனிப்பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவுக்கு நீங்கள் ஓட்டு கேட்க வேண்டும். மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக நிலையான ஆட்சி இருப்பதால் நாடு அடைந்த பயன்களையும், முன்பு இருந்து ஆட்சியின் தோல்விகளையும் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

இரட்டை என்ஜின் அரசு என்றால் வளர்ச்சிக்கான பாதை என்று பொருள். இந்த இரட்டை என்ஜின் ஆட்சியில் நலத்திட்டங்களின் பயன்கள் பயனாளிகளை விரைவாக சென்றடைகிறது. கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெற்றால், மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் இங்கு தோல்வி அடையும். திட்டங்களின் பெயர்களை மாற்றுவது, திட்டங்கள் தோல்வி அடையுமாறு பார்த்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

அரசு மானியங்கள்

கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் கர்நாடகத்தில் அதிக பலன் கிடைத்துள்ளது. நாட்டில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தியுள்ளோம். அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. ஊழலை ஒழிக்க காங்கிரஸ் முயற்சி செய்யவில்லை. 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஊழலை ஒழிக்க அரசு மானியங்கள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும்.

கர்நாடகம் மொழி, கலாசாரம், இலக்கியம் என எல்லாவற்றிலும் வளமான மாநிலம் ஆகும். கனகதாசர், பசவண்ணரின் கொள்கைகள் சமுதாயத்தை கட்டமைக்க உதவியுள்ளது. கன்னடர்கள் கன்னட இலக்கியத்தை படிக்கிறார்கள். எனக்கும், கா்நாடகத்திற்கும் இடையேயான உறவு பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது. 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் கர்நாடகம் குறித்து அடிக்கடி பேசுகிறேன்.

உள்கட்டமைப்பு வசதிகள்

சில கட்சிகள் அரசியலை ஊழலுக்கு பயன்படுத்தி கொண்டன. அவர்களுக்கு இளைஞா்கள் குறித்து கவலை இல்லை. இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். வளங்கள், வளர்ச்சி, மக்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும். பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளோம். ஆனால் நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இலவச கலாசாரத்தை ஒதுக்குவது அவசியமானது.

உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு, ஐ.ஐ.டி., மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு ஆட்சி செய்தவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படவில்லை. இலவச வாக்குறுதிகள் மூலம் மக்களை முட்டாள்களாக ஆக்குபவர்களை நம்பாதீர்கள். காங்கிரஸ் ஆட்சி இருக்கும் மாநிலங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் தங்களின் அரசியல் நலனுக்காக இலவசங்களுக்கு கட்சிகள் அதிகளவில் செலவு செய்கின்றன.

இலவச உணவு தானியங்கள்

இது வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை பாழாக்குகின்றன. இவ்வாறு இருந்தால், ஆட்சியை நடத்த முடியாது. நிகழ்காலத்துடன் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தினசரி தேவைகளை பூா்த்தி செய்வதற்காக ஆட்சியை நடத்த முடியாது. சொத்துக்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் குடும்பங்களின் வாழ்க்கை சரியான திசையில் பல ஆண்டுகளுக்கு பயணிக்கும். வளர்ந்த இந்தியாவை உருவாக்க டிஜிட்டல், சமூக உள்கட்டமைப்புகளில் நவீன முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) என்பதை முதலில் இந்தியாவை வளர்க்க வேண்டும் (பர்ஸ்ட் டெவலப் இந்தியா) என்று கருதி செயல்படுகிறோம். இந்தியா முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் இலவச திட்டங்களை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இலவச உணவு தானியங்களை வழங்குகிறோம். சில கட்சிகள் இளைஞர்களை முட்டாள்களாக ஆக்கலாம். ஆனால் அவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டை வழங்கி வருகிறது. காங்கிரஸ் என்றால் ஊழலுக்கு உத்தரவாதம் அளிப்பது, ஒரு சார்பாக செயல்படுவதற்கு உத்தரவாதம் அளிப்பது என்று பொருள். காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது.

காலாவதியான காங்கிரஸ்

ராஜஸ்தான், இமாசலபிரதேச மாநிலங்களில் குடும்ப அரசியலை தான் காங்கிரசார் வளர்த்துள்ளனர். காங்கிசிரன் 'வாரன்டி' அதாவது அந்த கட்சி காலாவதி ஆகிவிட்டது. 800 ஆண்டுகள் அடிமை காலத்திற்கு பிறகு நமக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 75 ஆண்டுகளுக்கு பிறகு அம்ரித் காலத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். கர்நாடகத்தின் வளர்ச்சி மூலம் நாடு வளர்ச்சி அடையும்.

சிவமொக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி பணிகளை இன்னும் வேகமாக செயல்படுத்தி பெரும்பான்மையுடன் கூடிய பா.ஜனதா அமைய வேண்டியுள்ளது. வரும் நாட்களில் உங்களுடன் நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கன்னடர்களின் நம்பிக்கையை பெற முயற்சி செய்வேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

பசவராஜ்பொம்மை

இந்த நிகழ்ச்சியில் உப்பள்ளியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, மைசூருவில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், பெங்களூருவில் பி.எல்.சந்தோஷ், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், ஷோபா, சிவமொக்காவில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான செயல்வீரர்கள், செயல் வீராங்கனைகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்