கத்திக்குத்தில் காயம் அடைந்த பிரேம்சிங்கிற்கு ஈசுவரப்பா நேரில் ஆறுதல்
சிவமொக்காவில், வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தின்போது பிரேம்சிங் என்பவர் கத்தியால் குத்தப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரை முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிவமொக்கா:
சிவமொக்காவில், வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தின்போது பிரேம்சிங் என்பவர் கத்தியால் குத்தப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரை முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வீரசாவர்க்கர் பேனர் அகற்றம்
சிவமொக்கா (மாவட்டம்) டவுனில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அமீர் அகமது சதுக்கத்தில் சுதந்திர போராட்ட தலைவர்கள், தியாகிகளின் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் இந்து அமைப்பின் பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னணி தலைவருமான வீரசாவர்க்கரின் உருவப்படம் அடங்கிய பேனரும் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வீரசாவர்க்கரின் பேனரை அகற்றிவிட்டு அங்கு திப்பு சுல்தான் பேனரை வைத்து சுதந்திர தின விழாவை கொண்டாட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
144 தடை உத்தரவு
இதையடுத்து நிலையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தி அங்கு திரண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரேம்சிங் என்ற வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிவமொக்கா டவுன் தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் முகமது ஜபி உல்லா, தன்வீர், அப்துல் ரகுமா, நதீம் ஆகியோர் ஆவர். அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஈசுவரப்பா நேரில் ஆறுதல்
இதற்கிடையே கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த பிரேம்சிங் சிகிச்சைக்காக சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மெக்கான் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பிரேம்சிங்கை நேரில் சந்தித்தார்.
பிரேம்சிங்கிற்கு ஆறுதல் கூறிய அவர், இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்கவும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பாவுடன், ராகவேந்திரா எம்.பி., பா.ஜனதா பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.