தலைமை கமிஷனர், அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மாநகராட்சி தலைமை கமிஷனர், அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2022-12-28 22:00 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மாநகராட்சி தலைமை கமிஷனர், அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஊழல் தடுப்பு படையில் புகார்

பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு ஊழல் தடுப்பு படையில் பா.ஜனதா பிரமுகரான என்.ஆர்.ரமேஷ் புகார் அளித்திருந்தார். அதாவது இப்பணிகளுக்காக ரூ.975 கோடி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த திட்டத்தில் மகாதேவபுரா, ஆர்.ஆர்.நகர், தாசரஹள்ளி, எலகங்கா, பொம்மனஹள்ளி ஆகிய 5 மண்டலங்களிலும் ஆழ்துளை கிணறு அமைக்காமலும், குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்காமலும் முறைகேடு நடைபெற்றிருந்தது. ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஏற்றார் போல் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்காமல் குறைந்த செலவில் அமைத்து பல கோடி ரூபாயை அதிகாரிகள் மோசடி செய்திருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், என்ஜினீயர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்.ஆர்.ரமேஷ் கூறி இருந்தார்.

தலைமை கமிஷனருக்கு சம்மன்

இந்த வழக்கை அமலாக்கத்துறைக்கு, ஊழல் தடுப்பு படை மாற்றி இருந்தது. அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள். கடந்த மாதம்(நவம்பர்) 5 மண்டலங்களில் இணை கமிஷனர்கள், 31 என்ஜினீயர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள்.

இந்த முறைகேடு தொடர்பாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திடம், விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக மாநகராட்சியின் என்ஜினீயரான பிரகலாத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபோல, மற்ற அதிகாரிகள், என்ஜினீயர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆவணங்களை வழங்க தயார்

இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூருவில் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை ஆழ்துளை கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி அமலாக்கத்துறை கேட்டு இருந்தது. இந்த வழக்கு, ஊழல் தடுப்பு படையில் பதிவாகி அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் கடந்த மாதமே (நவம்பர்) எனக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து நோட்டீசு வந்திருந்தது.

அமலாக்கத்துறைக்கு தகவல் அளிக்க மாநகராட்சி சார்பில் தலைமை என்ஜினீயரான பிரகலாத் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆவணங்கள் கேட்டாலும் அமலாக்கத்துறைக்கு வழங்க மாநகராட்சி தயாராக உள்ளது, என்றார்.

273 பக்க ஆவணங்கள்

இதுபற்றி நேற்று என்.ஆர்.ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சியின் 5 மண்டலங்களில் நடந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த 12-ந் தேதி என்னை அழைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக 273 பக்கங்களை கொண்ட ஆவணங்களை வழங்கி இருக்கிறேன். ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்