ரூ.3,419 கோடிக்கு மின் கட்டணம்; பில் தொகையால் அதிர்ச்சி அடைந்த பெண்
மத்திய பிரதேசத்தில் ரூ.3,419 கோடிக்கு மின் கட்டணம் செலுத்த கோரி வந்த பில் தொகை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர்,
மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரில் சிவ் விஹார் காலனியில் வசித்து வருபவர் பிரியங்கா குப்தா. இவருக்கு ரூ.3,419 கோடிக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரான சஞ்சீவ் கன்கனேவிடம் கூறியுள்ளார்.
அவரும் பில் தொகையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி சஞ்சீவ் கூறும்போது, இவ்வளவு பெரிய பில் தொகையை பார்த்து தனது தந்தை உடல்நலம் குன்றி போய் விட்டார் என கூறியுள்ளார். இதன்பின்னர், இந்த பில் மாநில மின் நிறுவனம் வழியே சரி செய்யப்பட்டு விட்டது என சஞ்ஜீவ் கூறியுள்ளார்.
இதுபற்றி மத்திய பிரதேச மத்திய சேத்திர வித்யுத் வித்ரான் நிறுவனத்தின் பொது மேலாளர் நிதின் மங்லிக் கூறும்போது, மனித தவாறல் இது ஏற்பட்டு உள்ளது. தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
யூனிட்டுகளுக்கு பதிலாக நுகர்வோரின் எண் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழியரின் பணியால், இவ்வளவு கூடுதல் தொகை பில்லில் வந்துள்ளது. இதன்பின்னர், ரூ.1,300 என்ற சரியான தொகையுடன் கூடிய பில் மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு விட்டது என அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, மத்திய பிரதேச மின்துறை மந்திரி பிரத்யுமன் சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த தவறு சரி செய்யப்பட்டு விட்டது. சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.