பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியது

தரையிறங்கி நின்ற போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியது.

Update: 2023-05-02 18:45 GMT

ராய்ச்சூர்:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாள் ஒன்றுக்கு 3 பொதுக்கூட்டங்களிலும், ஒரு ரோடு ஷோவும் நடத்தி சூறவாளி பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று சித்ரதுர்கா, விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை, ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் ஆகிய இடங்களில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். சித்ரதுர்கா பிரசார கூட்டத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் ெதாகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்க சிந்தனூரில் உள்ள ஒரு வயல் வெளியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மைதானத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வந்திறங்கினார். அவரது ஹெலிகாப்டருடன் 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு வீரர்கள் வந்தனர்.

பிரதமரின் ஹெலிகாப்டர் தறையிறங்கியதும், பிரதமர் மோடி பிரசார மேடைக்கு சென்றார். அந்த சமயத்தில் பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி, ஹெலிபேடு மைதானத்தில் ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வந்ததால், தரைப்பகுதி ஈரப்பதமாக இருந்தது. அப்போது ஒரு பாதுகாப்பு ஹெலிகாப்டர் திடீரென்று ஈரமாக இருந்த சேற்றில் சிக்கி அதன் அடிப்பாகம் புதைந்தது. அதாவது ஹெலிகாப்டர் எடை தாங்காமல் இந்த சம்பவம் நடந்தது. இதை கவனித்த பைலட் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அந்த ஹெலிகாப்டரை சுற்றி இருந்த சேற்றை பொக்லைன் மூலம் அகற்றினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் சேற்றில் சிக்கிய ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது. இதற்கிடையே பிரதமர் மோடி கூட்டத்தை முடித்்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கலபுரகிக்கு புறப்பட்டு சென்றார். இதனால் 2 பாதுகாப்பு ஹெலிகாப்டர்களுடன் பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் கலபுரகிக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்