இந்தியாவில் ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்தியவர் சித்தராமையா; உள்துறை மந்திரி அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியாவில் ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்தியவர் சித்தராமையா என்று அமித்ஷா குற்றம்சாட்டி யுள்ளார்.

Update: 2023-05-02 18:45 GMT

மைசூரு:

இந்தியாவில் ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்தியவர் சித்தராமையா என்று அமித்ஷா குற்றம்சாட்டி யுள்ளார்.

கர்நாடகத்தின் பாதுகாப்பு

கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா கா்நாடகத்தில் தங்கி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று சித்தராமையாவின் வருணா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சோமண்ணாவை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். அப்போது அவா் பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தோ்தல் முக்கியமானது. அதிலும் வருணா தொகுதி தேர்தல் மிக முக்கியமானது. நாங்கள் சோமண்ணாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். நீங்கள் அவரை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வைத்து சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் அவரை பெரிய ஆளாக உயர்த்துவோம். சோமண்ணாவுக்கு அளிக்கும் வாக்குகள் கர்நாடகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

வாபஸ் பெறப்படும்

பிரதமர் மோடியால் மட்டுமே கர்நாடகத்தை வளா்ச்சி அடைந்த, வளமான, பாதுகாப்பான மாநிலமாக மாற்ற முடியும். வேறு யாராலும் இதை செய்ய முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தான் பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சித்தராமையா ஆட்சிக்கு வந்தால் பி.எப்.ஐ. அமைப்பு மீதான தடை வாபஸ் பெறப்படும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்த மாநிலத்தில் அக்கட்சி மேலிடம் ஏ.டி.எம். பயன்படுத்தி கொண்டது. சித்தராமையா ஆட்சியில் ஊழலை தவிர எந்த பணிகளும் நடைபெறவில்லை. இந்தியாவில் ஊழல் மிகுந்த ஆட்சியை நடத்தியவர் சித்தராமையா. சித்தராமையா பேசும்போது, லிங்காயத் சமூகம் ஊழலை செய்ததாக கூறியுள்ளார். இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்.

தனி பட்ஜெட்

சித்தராமையா லிங்காயத் சமூகத்தை அவமதித்துவிட்டார். இதற்கு முன்பு லிங்காயத் சமூகத்தை சேர்ந்த நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல் போன்ற தலைவர்களை முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறக்கி அவமதித்தது. சித்தராமையா ஒவ்வொரு முறையில் தொகுதியை மாற்றிக்கொண்டே இருப்பது ஏன்?. அதற்கு காரணம் என்ன?. எங்கு சென்றாலும் வளா்ச்சி பணிகளை செய்வது இல்லை. அந்த தொகுதி மக்கள் உங்களை ஓட விடுகிறார்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ள தலைவர் உங்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டுமா? என்று இந்த தொகுதி மக்களிடம் கேட்க விரும்புகிறேன்.

எடியூரப்பாவை நாங்கள் முதல்-மந்திரி ஆக்கினோம். அவர் விவசாயத்திற்கு என்றே தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை நீர்ப்பாசன திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களும் அதிகளவில் அமல்படுத்தப்பட்டுள்ளன. சித்தராமையா வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவார்கள். லிங்காயத் மக்களுக்கான இட ஒதுக்கீடு போய்விடும்.

இடஒதுக்கீடு ரத்து

தலித், பழங்குடியின மக்களுக்கு உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விடுவார்கள். காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஈர்க்கும் அரசியலை தான் செய்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியால் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. இங்கு சோமண்ணாவை வெற்றி பெற வைத்தால், கர்நாடகத்தில் வருணா தொகுதியை வளர்ச்சி அடைந்த தொகுதியாக மாற்றுவோம்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்