விஜயாப்புரா தொகுதி ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் போட்டியில் இருந்து விலகல்
விஜயாப்புரா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
விஜயாப்புரா:
விஜயாப்புரா நகர தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அபிதுல் ஹமீது முஷ்ரிப் களமிறக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் பத்தேனவாஸ் மகாபரி போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கல் செய்த அவர் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் பத்தேனவாஸ் மகாபரி திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், விஜயாப்புரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு அமைப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லை. நான் பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் முழுக்க முழுக்க எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.
இந்த தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் வாக்குகள் பிரிந்து தான் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என பசனகவுடா பட்டீல் யத்னால் கருதினார். ஆனால் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், யத்னால் எம்.எல்.ஏ. தனது வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.