பி.டி.எம். லே-அவுட்டில் வெற்றி கனியை ருசிப்பாரா ராமலிங்கரெட்டி?

பி.டி.எம். லே-அவுட்டில் வெற்றி கனியை ருசிப்பாரா ராமலிங்கரெட்டி? என்பது பற்றி இங்கு காண்போம்.

Update: 2023-05-01 22:19 GMT

பெங்களூரு:

பெங்களூரு ஜெயநகர் தொகுதி 2008-ம் நடைபெற்ற தேர்தலில் மறுசீரமைக்கப்பட்டு பி.டி.எம். லே-அவுட் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. பி.டி.எம். லே-அவுட் தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 3 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராமலிங்கரெட்டியே வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1989, 1994, 1999 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்டு ராமலிங்கரெட்டி வெற்றி பெற்றிருந்தார்.

2008-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி மாறி பி.டி.எம். லே-அவுட்டில் போட்டியிட்டாலும் ராமலிங்கரெட்டி 46,811 வாக்குள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் நின்ற பிரசாத் ரெட்டி 44,954 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வாக்கு வித்தியாசம் 1,857 ஆகும்.

2013-ம் ஆண்டு தேர்தலில் பி.டி.எம். லே-அவுட் தொகுதியில் போட்டியிட்ட ராமலிங்க ரெட்டி 43,048 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் சுதாகரை வீழ்த்தினார். 69,712 வாக்குகளை ராமலிங்க ரெட்டியும், 26,664 வாக்குகளை சுதாகரும் பெற்றிருந்தனர்.

2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட ராமலிங்க ரெட்டி 67,085 வாக்குகள் பெற்று 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட லல்லேஷ் ரெட்டி 46,607 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். வாக்கு வித்தியாசம் 20,478 ஆகும்.

வருகிற சட்டசபை தேர்தலில் ராமலிங்க ரெட்டி இதே தொகுதியில் போட்டியிட உள்ளார். பா.ஜனதா சார்பில் முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீதர் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் வெங்கடேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பி.டி.எம். லே-அவுட் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 318 ஆண்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 676 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 44 பேரும் அடங்குவர். இந்த தேர்தலில் வாக்காளர்களின் வசதிக்காக பி.டி.எம். லே-அவுட் தொகுதியில் 247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

கடந்த 3 முறை இங்கு எம்.எல்.ஏ.வாக உள்ள ராமலிங்க ரெட்டி பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளார். இது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொகுதியில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் காங்கிரஸ் 5 வார்டுகளில் பலமாக உள்ளது. இது அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 29 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும், 4 முறை மந்திரியாகவும் பணியாற்றிய ராமலிங்க ரெட்டியை வீழ்த்த இந்த முறை பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள ராமலிங்க ரெட்டி இந்த தொகுதியில் 4-வது வெற்றியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்